வார இறுதி, முகூர்த்த நாட்களை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள்!
வார இறுதி மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது :
வார இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (பிப்.17, 18), முகூர்த்த நாட்களான திங்கள்கிழமை (பிப். 18), வெள்ளிக்கிழமை (பிப்.16) முன்னிட்டு, சென்னை மற்றும் பிற இடங்களிலிருந்து நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டை பின்பற்றும் ஒடிசா | உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் உடலுக்கு அரசு மரியாதை!
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் வெள்ளிக்கிழமை (பிப்.16) நாள்தோறும் இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகளும், பெங்களூரு, பிற இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 750 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனால், பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க முன்பதிவு செய்து பயணிக்கலாம்" என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.