ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணி: இடைவெளி 3 மீட்டராக குறைப்பு!
விண்வெளியில் தொடர்ச்சியாக பல சாதனைகளை இஸ்ரோ படைத்து வருகிறது. இதனிடையே ஸ்பேடெக்ஸ் திட்டத்தில் விண்வெளியில் 2 விண்கலன்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இப்போது இரு விண்கலன்களுக்கு இடையேயான தூரம் வெறும் 15 மீட்டராக குறைந்துள்ளது. மிகச் சீக்கிரமே இந்த பணிகள் முடியும் என்று தெரிகிறது.
இஸ்ரோ தொடர்ச்சியாக விண்வெளி துறையில் பல ஆய்வுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. ஆண்டுக்கு நூற்றுக்கணக்கில் சாட்டிலைட்களையும் வெற்றிகரமாக ஏவி வருகிறது. அடுத்தகட்டமாக விண்வெளியில் ஒரு ஆய்வு நிலையத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு இணையாக இந்த பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் ஆய்வு மையத்தை இஸ்ரோ அமைக்கவுள்ளது. 2035க்குள் இதை நிறுவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இதற்கு முன் சோதனை முயற்சியாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) திட்டத்தை இஸ்ரோ தற்போது செய்துவருகிறது. விண்வெளியில் வைத்து இரு சாட்டிலைகளை ஒருங்கிணைக்கும் பரிசோதனை முயற்சியே இந்த ஸ்பேடெக்ஸ் திட்டமாகும். இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 சாட்டிலைட்கள் கடந்த டிசம்பரில் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டன. முதலில் அந்த சாட்டிலைட்கள் ஒரே வட்டபாதையில் ஒன்றாக சுற்றி வரச் செய்யப்பட்டது.
இந்நிலையில், அடுத்த கட்டமாக 2 சாட்டிலைட்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இதற்காக சாட்டிலைட்களுக்கு இடையே உள்ள தூரத்தை இஸ்ரோ குறைத்து வருகிறது. கடந்த 8ம் தேதி சாட்டிலைட்களுக்கு இடையேயான தூரம் 500 மீட்டராக இருந்தது. அது படிப்படியாக குறைக்கப்பட்டு, இப்போது 15 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.
இதை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இரு சாட்டிலைட்களும் இணைய இன்னும் வெறும் 50 மீட்டர் மட்டுமே இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான சில அற்புதமான புகைப்படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், "ஸ்பேடெக்ஸ் அப்டேட்.. இரு விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டிற்கும் இடையேயான தூரத்தை 3 மீட்டராக குறைக்கும் சோதனை முயற்சியும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இப்போது இரண்டும் மீண்டும் பாதுகாப்பான தூரத்திற்கு நகர்த்தப்பட்டுவிட்டது. டேட்டாக்களை ஆய்வு செய்த பிறகு சாட்டிலைட்களை ஒருங்கிணைக்கும் பணி நடக்கும்" என தெரிவித்துள்ளது.
டேட்டாவை ஆய்வு செய்த பிறகு இன்னும் சில மணி நேரத்தில் இந்த ஒருங்கிணைப்பு பணிகள் முழுமையாக முடியும் எனத் தெரிகிறது. இந்த பணிகள் வெற்றிகரமாக முடிந்தால் அது இஸ்ரோவின் முக்கிய சாதனையாக இருக்கும்.