#SouthernRailway | இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய சிறப்பு ரயில்கள் முன்பதிவு | 3 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்!
தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் 3 நிமிடங்களில் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. இதனை முன்னிட்டு சென்னையில் வேலை மற்றும் கல்விக்காக வசிக்கும் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். குறிப்பாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் ரயில்களுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பேருந்துகளும், ரயில்களும் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூருக்கும், செங்கோட்டைக்கும், கன்னியாகுமரிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று (அக்.23) காலை 8 மணிக்கு தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
அதன்படி, சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் 3 நிமிடங்களில் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. குறுகிய நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்று தீர்ந்ததால் முயற்சித்து டிக்கெட்டுகள் கிடைக்காத பயணிகள் வருத்தம் அடைந்துள்ளனர். மேலும், வெய்ட்டிங் லிஸ்ட்டில் டிக்கெட்டுகள் முன்பதிவு குவிந்துள்ளன. உலகிலேயே மிகவும் கடினமான முன்பதிவு செய்யும் தளங்களில் ஒன்று IRCTC என்பது குறிப்பிடத்தக்கது.