தொடர் கனமழை எதிரொலி | தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்!
தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, நாளை நடைபெற இருந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
குமரிக்கடல் தொடங்கி குலசேகரப்பட்டணம் வரை நிலவக்கூடிய காற்றழுத்தம் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் தென் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை பொருத்தவரையில் மாநகர பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழையானது பதிவாகியுள்ளது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.
இதையும் படியுங்கள் : தொடர் கனமழை எதிரொலி | அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட ரெட் & மஞ்சள் ஆலர்ட்!!
கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக நாளை நடைபெற இருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.தொடர்ந்து, மழை பொழிவினால் கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டால் அதற்கு ஏற்ப தேர்வுகள் ஒத்திவைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.