தென் மாவட்ட பேருந்துகள் இனி தாம்பரம் வராது... கிளாம்பாக்கம்தான் கடைசி... புதிய நடைமுறை இன்று முதல் அமல்!
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதனையடுத்து கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகும், தாம்பரம் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வந்ததால் நெரிசலை கட்டுப்படுத்துவது சவாலாக இருந்து வந்தது.
இதனை கட்டுப்படுத்த போக்குவரத்து கழகம் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி, தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் போக்குவரத்து காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரைப்படி தமிழ்நாட்டின்ன் தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகள் அனைத்தும் இன்று (மார்ச் 4) முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இதையொட்டி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்துக்கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பஸ்கள், 3795 நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் கூடுதலாக 104 பஸ்கள் 815 நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது"
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.