#PlaneCrash | தென்கொரியா விமான விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு!
தென்கொரியா விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று விமானம் வந்துகொண்டிருந்தது. முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது. லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறக்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் விமானம் வெடித்து சிதறியது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியை தொடங்கினர். இந்த கோர விபத்தில் சிக்கி 62 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விமான விபத்து தொடர்பாக உடனடியாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். தற்போது இந்த விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு பதிவான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன் கஜகஸ்தானில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், 38 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்த ஓரிரு நாட்களில் மீண்டும் பெரிய அளவிலான விமான விபத்து நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.