தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திக்குத்து - மர்ம நபரிடம் போலீசார் விசாரணை..!
தென்கொரிய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான லீ ஜே மியுங்கை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பவர் லீ ஜே மியுங். இவர் இன்று அந்நாட்டின் பூசான் நகரில் கட்டப்பட்டு வரும் விமான நிலையத்தை பார்வையிட்டார்.
பின்னர் லீ ஜே மியுங் செய்தியாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆட்டோகிராஃப் வாங்குவதுபோல அவரை நெருங்கிய நபர் ஒருவர், திடீரென லீ ஜே மியுங்கின் கழுத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்த லீ ஜே மியுங்கை, அங்கிருந்த காவலர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : காஸாவின் சில பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெற்றது இஸ்ரேல்..!
லீ ஜே மியுங் மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தென் கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.