தென்கொரியா: வெப்ப அலையால் 21 பேர் உயிரிழப்பு!
தென்கொரியாவில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் கிட்டத்தட்ட 2,300 பேர் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெப்பம் கொளுத்தும் நிலையில், மே 20 முதல் ஆகஸ்ட் 11 வரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒருவர் இறந்துள்ளார். மே 20 முதல் ஆகஸ்ட் 11க்கு இடையில் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை பெற்ற மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,293 ஆக உயர்ந்துள்ளது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 2,139 ஆக இருந்தது.
வெப்ப அலைக்கு கால்நடைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 6,58,000 கோழிகள் உள்பட 7,03,000 கால் நடைகளும், 8,95,000 வளர்ப்பு மீன்களும் இறந்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை தொடரும் என்றும், இரவு நேரங்களில் மேற்குப் பகுதி மற்றும் கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பகல் நேர வெப்பநிலை நாடு முழுவதும் 30-36 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் எனவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.