திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய அளவிலான மகளிர் கோகோ விளையாட்டுப் போட்டி தொடங்கியது.
திருவாரூர் அருகே நீலக்குடி கிராமத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கான மகளிர் கோகோ போட்டிகள் இன்று (டிச.26) தொடங்கி டிச. 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், முதல்முறையாக மத்திய அரசு சார்பில் தென்னிந்திய பல்கலைக்கழகங்கள் பங்கேற்கும் பெண்களுக்கான மகளிர் கோகோ போட்டிகள் இன்று தொடங்கியது. பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய பல்கலைக்கழகங்களின் சங்க இணைச்செயலாளர் பல்ஜித் சிங் செகோன் பங்கேற்றார்.
இந்த போட்டியில் 75 பல்கலைக்கழகத்திலிருந்து சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்பதாக அறிவித்த நிலையில், 60 பல்கலைக் கழகங்களிலிருந்து இருந்து சுமார் 600 மாணவிகள் பங்கேற்று விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.