"தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்" - ஆந்திர முதலமைச்சர் #ChandrababuNaidu !
தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
விஜயவாடாவில் நடைபெற்ற அரசு விழாவில் ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். இவ்விழா மேடையில் பேசிய அவர்,
“தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தென்னிந்திய குடும்பங்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். முன்பு நான் ஆட்சியில் இருந்த போது அதிக குழந்தைகளை பெற வேண்டாம் என்று எல்லோரிடமும் சொன்னேன். நான் சொல்வதைக் கேட்டு, நீங்கள் அனைவரும் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மக்கள் தொகையைக் குறைத்தீர்கள்.
முன்பு, 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் சட்டத்தை நான் அமல்படுத்தினேன். ஆனால் இப்போது அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர ஆந்திர அரசு ஆலோசித்து வருகிறது.
தென்னிந்திய மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. கருவுறுதல் விகிதத்தின் தேசிய சராசரி 2.1 ஆக உள்ளது. ஆனால் தென்னிந்தியாவில் கருவுறுதல் விகிதம் 1.6 ஆக உள்ளது. 2047-ம் ஆண்டுக்குள் தென்னிந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விடும். தென்னிந்தியாவில் உள்ள இளைஞர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதால் இந்த பிரச்னை மேலும் அதிகரிக்கிறது" என்று தெரிவித்தார்.