#JuniorSouthAsianGames2024 | இந்திய வீரர்கள் 9 பதக்கங்களை வென்று அசத்தல்!
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் முதல் நாள் நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் 9 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று (செப்.11) கோலகலமாக தொடங்கியது. இந்த போட்டியை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த போட்டி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்தியாவின் 62 வீரர்கள் உட்பட தெற்காசியாவின் 7 நாடுகளில் இருந்து மொத்தம் 173 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த தடகள போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.
இந்தியாவில் இருந்து கலந்துகொள்ளும் 62 பேரில் 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆவர். இந்த சர்வதேச தடகள போட்டியானது 1995ஆம் ஆண்டிற்கு பிறகு, 29 ஆண்டுகள் கழித்து நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் சித்தார்த் சவுத்ரி, அனுராக் சிங் களமிறங்கினார்.
நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 19.19 மீ., துாரம் எறிந்த சித்தார்த் சவுத்ரி, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு இந்திய வீரர் அனுராக் சிங், 18.91 மீ., துாரம் எறிய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இலங்கையின் ஜெயவி (15.62) வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் அபிநயா ராஜராஜன் (தமிழ்நாடு), 11.77 வினாடி நேரத்தில் ஓடி வந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இந்தியாவின் சுதீக் ஷா (11.92) வெள்ளி வென்றார். ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் மிருத்யம் ஜெயராம் (10.56) வெண்கலம் வசப்படுத்தினார்.
பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பூஜா, 1.80 மீ., தாண்டி, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இலங்கையின் திமேஷ் (1.65), நேத்ரா (1.65) அடுத்த இரு இடம் பிடித்தனர். பெண்களுக்கான 800 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் லட்சுமி பிரியா, 2 நிமிடம், 10.87 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 800 மீ., இந்தியாவின் வினோத் குமார் (1:50.07), போபண்ணா (1:50.45) 2, 3வது இடம் பிடிக்க, வெள்ளி, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இலங்கையின் அவிஷ்கா (1:49.83 நிமிடம்) தங்கம் வென்றார். தெற்காசிய ஜூனியர் தடகளத்தில் முதல் நாளான நேற்று இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் கைப்பற்றி பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.