#SouthAsianJuniorAthleticsChampionship | வட்டு எறிதலில் தங்கம், வெள்ளியை தட்டித் தூக்கிய இந்தியா!
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் வட்டு எறிதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
சென்னை நேரு விளையாட்டரங்கில் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் 29ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, நேபால் என 7 தெற்காசிய நாடுகளில் இருந்து 174 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
20 வயதிற்கு உட்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்தியாவில் இருந்து 62 பேர் பங்கேற்றுள்ளதில் 9 பேர் தமிழ்நாட்டில் இருந்து இடம் பிடித்துள்ளனர். இந்நிலையில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியா இரண்டு பதக்கங்களை வென்றுள்ளது. இந்திய வீராங்கனை அனிஷா 49.91மீ எறிந்து தங்க பதக்கம் வென்றார். மற்றொரு வீராங்கனை அமனாத் 48.38 மீ எறிந்து இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
முதல் நாளான நேற்று இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.