55 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்க அணி - 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய சிராஜ்!
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூ லேண்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜனவரி 3) தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் அஷ்வினுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவும், ஷர்துல் தாகூருக்கு பதிலாக முகேஷ் குமாருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக எய்டன் மார்க்ரம், கேப்டன் டீல் எல்கர் களத்தில் இறங்கினர். எய்டன் மார்க்ரம் 2 ரன்கள் எடுத்திருந்த போது சிராஜ் பந்துவீச்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். டீன் எல்கர் 4 ரன்னில் சிராஜ் பவுலிங்கில் போல்டாகி ஆட்டமிழந்தார். டோனி டி சோர்ஸி 2 ரன்னும், திரிஸ்டரி ஸ்டப்ஸ் 3 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பும்ரா 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தவிர மற்ற 6 விக்கெட்டுகளை சிராஜ் கைப்பற்றி அசத்தினார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், இந்த மேட்ச்சில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை சமன் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.