சமந்தாவை புகழ்ந்து பேசிய சோபிதா! இணையத்தில் வைரலாகும் பழைய வீடியோ!
நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலா இருவரும் இன்று நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நிலையில் நடிகை சோபிதா சமந்தாவை புகழ்ந்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தெலுங்கில் ஏ மாயா சேசாவே, மனம், லவ் ஸ்டோரி, மஜிலி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவருடன் நடிகை சமந்தா விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து நாக சைதன்யா, சமந்தா ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே, நாக சைதன்யா, சமந்தா இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு பிரிவதாக அறிவித்து விவாகரத்து பெற்றுகொண்டனர். அதன் பிறகு கடந்த சில மாதங்களாக நடிகர் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலிபாலாவைக் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் பரவின.
இந்த நிலையில், நடிகை சோபிதா நடிகை சமந்தா குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், “நடிகை சமந்தாவின் பயணம் அற்புதமானது. அவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களைப் பார்த்தாலே தெரியும். உண்மையிலேயே அவை சிறப்பானவை” என தெரிவித்திருந்தார். மேலும், “நாக சைதன்யா மிகவும் அமைதியானவர். நிதானமும் கண்ணியமும் உடையவர். அவரைப் பாராட்டுகிறேன்” என்றும் அந்த வீடியோவில் நடிகை சோபிதா பேசியிருந்தார்.