“வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிகிறது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
பி.டி. ராஜனின் ‘வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று(ஏப்ரல்.22) நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந்நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “திராவிட இயக்கத்தின் வேராக விளங்கும் நீதிக்கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான பி.டி.ராஜன் அவர்கள் குறித்த “வாழ்வே வரலாறு” என்ற நூலை நீதிக்கட்சியின் வழித்தடத்தில் உருவான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து நான் வெளியிடுவதில் என்னுடைய வாழ்நாளில் கிடைத்திருக்கக்கூடிய பெருமையாக நான் கருதுகிறேன்.
இந்த விழாவுக்கான அழைப்பிதழில் ‘நீதிக்கட்சியின் இறுதித் தலைவராக இருந்த’ என்று போட்டுள்ளீர்கள். நீதிக்கட்சிக்கு இறுதி என்பதே கிடையாது. இன்னும் சொல்கிறேன். நீதிக்கட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி என்று தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே நான் சொல்லியிருக்கிறேன். ஏனென்றால், 1967-இல் நாம் ஆட்சிக்கு வந்தபோது, திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக ஆட்சிக்கு வந்தது என்று சில ஊடகங்களில் எழுதினார்கள்... அப்போது பேரறிஞர் அண்ணா, ‘அரசியல் தேர்ச்சியுடன் நாடாண்ட நீதிக்கட்சியின் பாரம்பரியத்தில் வளர்ந்த கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று சொன்னார்.
நீதிக்கட்சியின் செயலாளர்களில் ஒருவராக இருந்த கி.ஆ.பெ.விசுவநாதம், ‘நீதிக்கட்சி, இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாட்டன் முறை. பெரியார் அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், தந்தை முறையாகும்’ என்று குறிப்பிட்டார். இதையெல்லாம் கடந்து, 1966-ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் பவளவிழா பொதுக்கூட்டத்தில், இன்றைய திமுகவினர் நம்முடைய வாரிசுகள்தான் என்று பி.டி.ராஜன் குறிப்பிட்டார். எனவே, நான் அழுத்தந்திருத்தமாக சொல்கிறேன்... திமுகவின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான்.
பி.டி.ராஜனுக்கு நம்முடைய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் வாரிசு அல்ல, நானும் வாரிசுதான். திராவிட வாரிசுகள். இங்கே இருப்பவர்கள் எல்லோரும் திராவிட வாரிசுகள். வாரிசு என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு எரிகிறது. பற்றிக்கொண்டு எரிகிறது. அப்படி எரியட்டும் என்று தான் நாம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கு எப்படி திராவிடத்தை ஒழிப்போம் என்று சில கைக்கூலிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ, அதே மாதிரி, பி.டி.ராஜன்காலத்திலும், நீதிக்கட்சியை குழி தோண்டி பாதாளத்தில் புதைத்துவிடுவேன்" என்று ஒரு தலைவர் சொன்னார். ஆனால், பி.டி.ராஜனோடு தொடர்ச்சியாக, பழனிவேல் ராஜன் வந்தார். இப்போது, பழனிவேல் தியாகராஜனும் நம்முடன் இருக்கிறார்.
பி.டி.ராஜன் குறித்த இந்த "வாழ்வே வரலாறு” நூல் மிகப்பெரிய வரலாற்றுக் கருவூலம்! தனிப்பட்ட ஒரு மனிதரின் வரலாறாக இல்லாமல், ஒரு நூற்றாண்டின் வரலாறாக, நீதிக்கட்சியின் வரலாறாக, நீதிக்கட்சியின் முன்னோடிகள், நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள், சுயமரியாதை இயக்கம் என்று எல்லாவற்றைப் பற்றியும் இந்த நூல் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்! இப்படிப்பட்ட கருவூலத்தை உருவாக்கிய பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.
எல்லோருடைய வாழ்க்கையையும் வரலாறு என்று சொல்லிவிட முடியாது சிலரின் வாழ்க்கையைத்தான் அப்படி சொல்ல முடியும். அப்படிப்பட்டவர்தான் பி.டி.ராஜன்.
1920 முதல் தொடர்ந்து 17 ஆண்டுகள், சட்டமன்ற உறுப்பினர். பொப்பிலி அரசர், பி.முனுசாமி ஆகியோர் அமைச்சரவையில் அமைச்சர். சென்னை மாகாணத்திற்கு முதலமைச்சர். தந்தை பெரியார் நடத்திய முதலாவது சுயமரியாதை மாநாட்டில் கொடியேற்றி வைத்தவர். இந்துசமய அறநிலைய வாரியம் அமைக்க எல்லா முயற்சிகளையும் எடுத்த ஆன்மீகவாதி என பல்வேறு பதவிகளை வகித்தவர். இப்படி வாழும் போதே வரலாறாக வாழ்ந்தவர்தான் பி.டி.ராஜன். சமூகநீதி - சமத்துவம் மாநில சுயாட்சி இந்தியக் கூட்டாட்சி ஆகிய கருத்துகளை தமிழ் மண்ணில் பரப்பி, ஒரு அரசியல் இயக்கத்தின் கொள்கையாக மாற்றி ஆட்சியின் கொள்கையாகவும் அதனை ஆக்கிய பெருமை நீதிக்கட்சிக்கு உண்டு. அதை மிகச் சிறப்பாக செய்த தலைவர்களில் முக்கியமானவர் பி.டி.ராஜன்.
நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகமாக மாற்றும் முடிவை பெரியார் எடுத்தபோது, பி.டி.ராஜன் அதை ஏற்காமல், அதே பெயருடன் தொடரவேண்டும் என்று சொன்னாலும், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து எந்தக் காலத்திலும் அவர் மாறவே இல்லை. அவரது பேச்சும், எழுத்தும் இந்த நூலில் தொகுக்கப்பட்டிருக்கிறது.
1938 ஆண்டு மொழிப்போராட்டத்தின்போது, பி.டி.ராஜன் பேசியபோது ‘நாம் இந்தி எதிர்ப்பாளர்கள் அல்ல, இந்தியை திணிப்பவர்களின் எதிர்ப்பாளர்கள்” என்று அன்றைக்கே விளக்கமாக பேசியவர். அவர் அன்றைக்கு சொன்னதை நாம் இன்றைக்கும் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். டெல்லியின் ஆதிக்க மனோபாவமும் மாறவில்லை நம்முடைய போராட்ட குணமும் ஓயவில்லை.
நம்முடைய எதிரிகளின் முகங்கள்தான் மாறியிருக்கிறதே தவிர
அவர்கள் உள்ளமும் எண்ணமும் இன்னும் மாறவில்லை. அது மாறும் வரை நம்முடைய போராட்டம் ஓயாது தொடரும்.
தமிழவேள் பி.டி.ராஜன் பத்து கட்டளைகளில் சொல்லியிருக்கிறார். அதில் ஒன்று வெற்றியோ, தோல்வியோ இதில் எதுவாகினும் நிற்க நிலை மாறதெனில், அப்படிதான் தி.மு.க-விம், நம்முடைய அரசும் கம்பீரமாக நிற்கிறது. நம்முடைய இந்த வலிமைக்கும் மனவுறுதிக்கும் கொள்கை பிடிப்புக்கும் பி.டி.ராஜன் போன்ற திராவிடத் தலைவர்கள் நம் தமிழ் மண்ணில் விதைத்திருக்கும் விதைதான் காரணம்.
ஒர் அமைப்பு என்ற முறையில் நீதிக்கட்சி மறையலாம். ஆனால், அந்தக் கட்சி எந்தக் கொள்கையின் அடிப்படையில் தோன்றியதோ அந்தக் கொள்கை என்றைக்கும் நிலைத்து நிற்கும்" என்று தமிழவேள் பி.டி.ராஜன் சொல்லியிருப்பதற்கு இந்த அரங்கில் இருக்கும் நாமும் கோடிக்கணக்கான மக்களின் ஆதரவால் உருவாகியிருக்கும் நம்முடைய திமுக ஆட்சியும்தான் சாட்சி.
பி.டி.ராஜன், ‘திராவிட இயக்கத்தின் கொள்கையைப் பேச ஒரே ஒருவர் உறுதியோடு இருந்தால் போதும். அந்தக் கொள்கை வளர்ந்துவிடும்’ என்று சொன்னார். இன்றைக்கு ஒருவரல்ல, கோடிக்கணக்கானோர் திராவிடக் கொள்கைகளை பேசிக்கொண்டு இருக்கிறோம்”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.