"திமுகவைப்போல வெற்றி பெறுவோம் என சிலர் பகல் கனவு காண்கிறார்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுகவின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்சியின் இளைஞர் அணி சார்பில் ‘திமுக 75 அறிவுத் திருவிழா’ எனும் நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர் கூறியதாவது,
"கட்சியை தொடங்கினோம், ஆட்சியை பிடித்தோம் என்று ஆட்சிக்கு வரவில்லை. ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே திமுக. இப்படி ஒரு இயக்கம் இனி தோன்ற முடியாது. இன்னும் சிலர் திமுகவைப்போல வெற்றி பெறுவோம் என பகல் கனவு காண்கிறார்கள். வரலாறு தெரியாதவர்கள் திமுகவை மிரட்டுகிறார்கள். திமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாது. திமுக உழைத்த உழைப்பு சாதாரணமானது அல்ல; எத்தனை கூட்டங்கள், தியாகங்கள், துரோகங்கள்.
திமுகவை விமர்சிப்பவர்கள் கூட 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' புத்தகத்தில் கட்டுரை எழுதியுள்ளனர். இந்த சாதனையும், வளர்ச்சியும் மற்றவர்களின் கண்களை உறுத்துகிறது. தமிழ்நாட்டில் முடக்க நினைத்தால் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று நம்மேல் கோபம். திராவிடம் வெல்லும் அதை காலம் சொல்லும் என கூறும் அறிவுத் திருவிழா இது. கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாது என்று SIR-யை வைத்து தேர்தல் ஆணையம் மூலம் வீழ்த்த முயற்சிக்கிறார்கள். இந்திய ஜனநாயகம், தமிழ்நாட்டை காக்க தொடர்ந்த பயணம் 2026-லும் தொடரும்"
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.