“சமூக ஏற்றத்தாழ்வே உண்மையான ஆபத்து” - மேற்கு வங்க வன்முறை குறித்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் கருத்து!
காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து தி காஷ்மீா் ஃபைல்ஸ் என்ற திரைப்படத்தை இயக்கி நாடு முழுவதும் கவனம் பெற்றவர் விவேக் அக்னிஹோத்ரி. இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி அரசியலில் பேசு பொருளாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆளும் பாஜக இப்படத்தை ஆதரித்தது. காங்கிரஸ் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரித்தது. இந்த படத்திற்கு பிறகு விவேக் அக்னிஹோத்ரி ‘தி டெல்லி ஃபைல்ஸ்’ என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.
இந்த நிலையில் விவேக் அக்னிஹோத்ரி, மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "எங்கள் புதிய படமான தி டெல்லி ஃபைல்ஸின் கதை முர்ஷிதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு படப்பிடிப்பு நடத்துவது சாத்தியமற்றது, அரசாங்கமோ காவல்துறையோ உதவவில்லை. அது வேறு நாடு போல இருந்தது. நாங்கள் செட் அமைத்து மும்பையில் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருந்தது. சமூக ஏற்றத்தாழ்வே உண்மையான ஆபத்து" என்று குறிப்பிட்டிருந்தார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தின் இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் ரயில் நிலையங்கள், பேருந்துகள் மற்றும் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன, இந்த வன்முறையில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், வன்முறையை கட்டுப்படுத்த மத்திய ஆயுத காவல் படை கொல்கத்தா உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில் குவிக்கப்பட்டது. இதனிடையே அம்மாநில முதலமைச்சர் அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டாதீர்கள் என மக்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்.