கோலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தானா!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்று சமனில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 412 ரன்கள் எடுத்து குவித்தது. அந்த அணியில் சிறப்பாக ஆடிய பெத் மூனி 75 பந்துகளில் 138 ரன்கள் விளாசினார்.
இதனை தொடர்ந்து 413 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா விளாயாடி வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரராக களமிரங்கிய நட்சத்திர வீரர் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முன்னதாக அவர் 50 பந்துகளில் 100 ரன்களை கடந்தார். இதன் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய இந்தியர் (ஆடவர் மற்றும் மகளிர் உள்பட) என்ற விராட் கோலியின் சாதனையை ஸ்மிருதி மந்தனா முறியடித்துள்ளார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி 52 பந்துகளில் சதம் விளாசியிருந்தார். அதுவே இந்தியர் ஒருவரால் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதமாக இருந்து வந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.