#SLvsWI - மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி டம்புல்லாவில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 162 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பௌவல் 37 ரன்கள் எடுத்தார். குடகேஷ் மோட்டி 32 ரன்களும், பிரண்டன் கிங் 23 ரன்களும் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷனா மற்றும் வனிந்து ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நுவான் துஷாரா, கமிந்து மெண்டிஸ், சரித் அசலங்கா மற்றும் மஹீஷ் தீக்ஷனா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இலங்கை அணி, 18 ஓவர்களில் 166 ரனகள் குவித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தியது. இலங்கை தரப்பில் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இருதரப்பு டி20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் முறையாக இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் மெண்டிஸ் ஆட்ட நாயகனாகவும், பதும் நிசங்கா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.