'டூரிஸ்ட் ஃபேமிலி' படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய SK!
சசிகுமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘நந்தன்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சசிகுமார் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இதையும் படியுங்கள் : “இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தம் வரவேற்கத்தக்கது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாரான இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நசரேத் பசலியான், மகேஷ் ராஜ் பசலியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
கடந்த மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான 9 நாட்களில் உலகளவில் ரூ. 32 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்திருந்ததாகவும், படம் மிகவும் பிடித்திருந்ததாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளார்.