#Singapore | முன்னாள் அமைச்சருக்கு 12 மாதங்கள் சிறை... வரலாற்றில் முதல்முறை!
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஈஸ்வரன். இவர் ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தில், தொழிலதிபர்களிடம் 4 லட்சம் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான பரிசுப் பொருட்களை முறையற்ற விதத்தில் பெற்றது, நீதிக்கு இடையூறு விளைவித்தமை என பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார்.
சிங்கப்பூரை பொறுத்த வரை, குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 165ன்கீழ், பொதுச் சேவை ஊழியர் ஒருவர் அவரது அதிகாரபூர்வ நிலையில் எவரிடமிருந்தும் விலைமதிப்புள்ள எதையும் இலவசமாகவோ போதிய கட்டணமின்றியோ ஏற்றுக்கொள்வது குற்றமாகும்.
அதன்பேரில் ஈஸ்வரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் சிலரிடமிருந்து பரிசுப் பொருட்களை பெற்றுக்கொண்டதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதம் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
இவர் வரும். அக்.7ஆம் தேதி சிறையில் அடைக்கப்படுவார். ஏறக்குறைய கடந்த 50 ஆண்டு காலத்தில், சிங்கப்பூரில் அமைச்சர் ஒருவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்ததப்படுத்தப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.