#Diwali -யை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்கள்… போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த #SingaperumalKoil…!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் செல்வதால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (அக்.31) கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. எனவே, கல்வி மற்றும் வேலைக்காக சென்னையில் தங்கி இருக்கும் வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி விட்டனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சுமார் 10 லட்சம் பேர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலரும் கடந்த சனிக்கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். சென்னையில் இருந்து நாளை இரவு வரை ஏராளமான மக்கள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக 11,176 சிறப்புப் பேருந்துகளை போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. அதனுடன் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பலரும் தங்களது இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டதுடன், இரு மற்று நான்கு சக்கர வாகனங்களிலும் மக்கள் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் செல்வதால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.