சிங்கபெருமாள் கோவில் | லாரி மோதியதில் சுக்குநூறாக நொறுங்கிய கார்… குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு!
மதுரை ஜானகி நகர் பதும்பூர் சிக்கந்தர் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. அவரது மகன் கார்த்திக். கார்த்திக் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பத்தினருடன் சொகுசு காரில் வருகை தந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அவர்கள் காரில் மதுரை நோக்கி புறப்பட்டனர். அதன்படி, கார்த்திக், அவரது மனைவி நந்தினி, அவர்களது குழந்தைகளான 7வயது சிறுமி இளமதி, ஒரு வயது குழந்தை சாய்வேலன் மற்றும் நந்தினியின் தந்தை அய்யனார், அவரது மனைவி தெய்வபூஞ்சாரி மற்றும் கார் ஓட்டுநர் சரவணன் ஆகிய 7 பேர் காரில் பயணம் செய்தனர்.
அப்போது சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி அருகே சிக்னலில் இவர்களது கார் நின்றது. அதிவேகமாக வந்த லாரி இவர்களின் காரின் பின்னால் வேகமாக மோதியது. இதில் அவர்களின் கார் முன்னே நின்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. இரு லாரிகளுக்கும் நடுவில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் கார் ஓட்டுநர் சரவணன், நந்தினியின் தந்தை அய்யனார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், காரில் பயணம் செய்த கார்த்திக், நந்தினி, நந்தினியின் தாயார் தெய்வபூஞ்சாரி மற்றும் ஓரு வயது குழந்தை சாய்வேலன், 7 வயது சிறுமி இளமதி ஆகியோர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை சாய் வேலன் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார். சிறுமி இளமதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்
பட்டுள்ளார். குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் விபத்தில் சிக்கியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.