ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற #YusufDikec - இணையத்தில் வைரலாகும் வீரர்!
ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் களத்தில் சாதாரணமாக துப்பாக்கியை கையாண்ட இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜூன் 26-ம் தேதி முதல் தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இதில் கடந்த ஜூலை 30-ம் தேதி ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டியில், இந்தியா சார்பாக மனு பாகர் – சரப்ஜோத் சிங், துருக்கி சார்பாக தர்ஹான் – யூசுப் டிகெக், தென் கொரியா சார்பாக லீ வான்ஹோ – ஒ யே-ஜின்னை ஜோடிகள் பங்கேற்றனர். இதில், கொரியாவை வீழ்த்தி இந்தியாவின் மனு பாகர் – சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது. இறுதிச் சுற்று ஆட்டத்தில் துருக்கியை வீழ்த்தி, செர்பியா தங்கப் பதக்கம் வென்றது. 14 புள்ளிகளுடன் துருக்கி வீரர் யூசுப் டிகெக் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
துருக்கியில் பல்வேறு வகையான பிஸ்டல் சுடுதல் போட்டிகளில் யூசுப் டிகெக் பங்கேற்று வென்று தேசிய அளவில் கவனம் பெற்றார். 51 வயதாகிய இவர், 2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு சம்மர் ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் கலந்து கொண்டிருக்கிறார். 2014ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 25 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பிரிவுகளில் வென்றார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று 7 பிரிவுகளில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பட்டத்தை வென்றவர்.
இதையும் படியுங்கள் : #Haryana | 2 மாணவனை 25 கி.மீ. துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற பசு காவலர்கள் – காரணம் என்ன
இந்நிலையில், இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது. ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் களத்தில் சாதாரணமாக ஒரு கையை பாக்கெட்டிற்குள் விட்டுக் கொண்டு ஒரு கையால் துப்பாக்கியை கையாண்டது, அவருடைய எளிமையான டி-ஷர்ட், கண்ணாடி உடன் கூடிய அனுபவமிக்க தோற்றத்தால் அனைவரையும் ஈர்த்துள்ளார்.