”PM SHRI திட்டத்தில் கையெழுத்திடுங்கள்” - #CMMKStalinக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்!
PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள ’பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது..
நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தேசிய கல்வி கொள்கையின் கீழ் பலன் கிடைப்பதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 10 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். புதிய கல்வி கொள்கை தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதற்கு ஆதரவு அளிக்கிறது.
குறிப்பாக பலமொழிகள் மற்றும் தாய்மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்று தமிழ், நமது நாட்டின் பழமையான மொழியாகவும் தமிழ் உள்ளது என்பது பெருமைக்குரியது விஷயம்.
பிரதமரின் வழிகாட்டுதலின்படி, தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் வகையில் காசி தமிழ் சங்கமமும், சௌராஷ்டிரா தமிழ் சங்கமமும் ஏற்படுத்தப்பட்டன. மேலும், தமிழ் மொழியைக் கற்க வசதியாக ஒரு பிரத்யேக தமிழ் சேனல் ஜூலை 29, 2024 அன்று தொடங்கப்பட்டது. NEP 2020-ஐ முழுமையாக செயல்படுத்துவதற்கான முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு இன்னும் கையெழுத்திடவில்லை
கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்த PM SHRI திட்டத்தை ஏற்றுக்கொள்வது அவசியம். இணைந்து எடுக்கும் முயற்சிகள் மூலம், ஒளிமயமான எதிர்காலத்தை வளர்க்கவும், வளமான கல்வி முறையை உருவாக்குவதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே, தமிழக அரசு அளித்த உறுதிமொழியின்படி, PM SHRI திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.