இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இத்தொடரை ரோஹித் சர்மா வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்மையில் ரோஹித் சர்மா தனது ஓய்வை அறிவித்தார். அவருக்கடுத்தபடியாக சீனியர் பிளேயர் லிஸ்ட்டில் உள்ள விராட் கோலியும் தனது ஓய்வை அறிவித்தார்.
இந்த சூழலில் அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்படுவார் என தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்திய அணியை சுப்மன் கில் வழிநடுத்துவார் என்று அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான இந்திய அணியின் 37வது கேப்டனாகிறார்.
அத்துடன் அவர் தலைமையின் கீழ் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணியில் சுப்மன் கில்(கேப்டன்), ரிஷப் பண்ட்( துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.