“திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் இன்றும் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா?” - ஆளுநர் ரவி!
மகாத்மா காந்தி தொடர்புடைய நிகழ்வுகளை சென்னையில் உள்ள காந்தி மண்டபத்தில் நடத்த வேண்டும்; அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளன்று காந்தி மண்டபத்தில் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிடிவாதமாக ஏற்க மறுக்கிறார் என ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை எக்ஸ் தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
“காந்தி மண்டபம், சென்னை கிண்டி தேசிய உயிரியல் பூங்காவை ஒட்டியுள்ள ஒரு பரந்த நிலத்தில் 1956 -ஆம் ஆண்டு கே. காமராஜர் அவர்களால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவுச்சின்னமாகும். காந்தி நினைவு நிகழ்வுகளை - அவரது பிறந்தநாள் மற்றும் உயிர்த்தியாக தினத்தை - நகர அருங்காட்சியகத்தின் ஒரு மூலையில் நடத்துவதில் ஏதேனும் அர்த்தமுள்ளதா?
தேசப்பிதாவுக்கு உரிய மரியாதை செலுத்தவும், அத்தகைய நிகழ்வுகளை காந்தி மண்டபத்தில் தகுந்த முறையில் நடத்தவும் முதலமைச்சரிடம் நான் பலமுறை விடுத்த கோரிக்கைகள் பிடிவாதமான மறுப்பை சந்தித்தன. காந்திஜி தனது வாழ்நாளில் திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டு கேலி செய்யப்பட்டார். ஆனால் இன்றும் அவர் தொடர்ந்து கேலி செய்யப்பட வேண்டுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.