திருப்பதியில் தனுஷ் திரைப்பட ஷூட்டிங்... | வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விட்டதால் பக்தர்கள் அவதி...!
தனுஷ் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக திருப்பதி மலை
அடிவாரத்தில் பக்தர்களின் வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விடப்பட்டதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படத்திற்குப் பின் தனுஷ் இயக்கி, நடிக்கும் அவரின் 50-வது படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள அவரது 51-வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது.
இப்படத்தை இயக்குநர் சேகர் கமூலா இயக்குகிறார். நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியப் படமாக இது உருவாகிறது. டிஎன்எஸ் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள
அலிப்பிரி பகுதியில் இன்று காலை துவங்கி நடைபெற்றது. இதனால் படப்பிடிப்பில் தடை ஏதும் ஏற்பட கூடாது என்ற நோக்கத்தில் போலீசார் திருப்பதி மலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்துகள், பக்தர்களின் வாகனங்கள் ஆகியவற்றை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக திருப்பி விட்டனர்.
போக்குவரத்தை மாற்றும் பணியில் படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு அளிக்க
வந்திருந்த பவுன்சர்களும் ஈடுபட்டனர். இதனால் மிகவும் குறுகலான ஹரே ராம ஹரே கிருஷ்ணா சாலையில் பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பக்தர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செயல்படும் திருப்பதியில்
சினிமா படப்பிடிப்பு ஒன்றுக்காக பக்தர்களின் வாகன போக்குவரத்தை மாற்றி
பக்தர்கள், பொது மக்கள் ஆகியோருக்கு காலை நேரத்தில் சிரமத்தை ஏற்படுத்திய
போலீஸாரின் நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.