கமலா ஹாரிஸின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு... #Americaவில் தொடரும் திக்..திக்!
அமெரிக்காவில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிட இருந்த நிலையில், பல காரணங்களால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் போட்டியில் வந்ததிலிருந்தே, அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் கமலா ஹாரிஸே வெற்றிப் பெறுவார் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். நேற்று இரவு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவர்களில் தோட்டாக்களால் சேதம் ஏற்பட்டுள்ளது. கதவில் 2 குண்டு துளைகளும், ஜன்னலில் இரண்டு துளைகளும் பதிந்துள்ளன. இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இது இந்த மாதத்தில் நடந்த இரண்டாவது துப்பாக்கிச் சூடு ஆகும்.
சமீபத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை பிரசார கூட்டத்தில் ஒருமுறையும், கோல்ப் மைதானத்தில் விளையாடிக்கொண்டு இருந்த போது ஒரு முறையும் துப்பாக்கிச்சூடு நடத்தி கொல்ல முயற்சி நடந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முக்கிய வேட்பாளர்களை குறிவைத்து தாக்குதல் சம்பவம் நடந்து வருவது அமெரிக்கா தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.