முட்டை விலை வரலாறு காணாத உயர்வு.. முட்டை பிரியர்களுக்கு ஷாக்!
நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாட்டின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் .
இந்த நிலையில், நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. அதன்படி, ரூ.5.90 ஆக இருந்த முட்டை கொள்முதல் விலையை இன்று ஒரே நாளில் 5 காசுகள் உயர்த்தி ரூ.5.95 ஆக நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி ஒரு முட்டையின் கொள்முதல் விலை 5.90 ஆக இருந்ததே அதிகபட்ச விலையாக இருந்தது. இதன் காரணமாக, சென்னையில் முட்டை ரூ.6.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவன பொருட்களான மக்காச்சோளம், சோயா ஆகியவற்றில் விலை உயர்ந்துள்ளதும், பண்ணைகளில் தற்போது முட்டை உற்பத்தி குறைவாக இருப்பதும் முட்டை விலை உயர்விற்கான முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. முட்டை விலை மேலும் அதிகரித்தால் ஓட்டல்களில் முட்டை சார்ந்த உணவு பொருட்களான ஆம்லெட், முட்டை பரோட்டா உள்ளிட்டவைகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.