5வது முறையாக வங்கதேச பிரதமராகிறார் ஷேக் ஹசீனா - முழுமையான முடிவுகள் இன்று வெளியாகும்.!
வங்கதேச தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் ஷேக் ஹசீனா 5வது முறையாக வங்கதேச பிரதமராக உள்ளார்.
வங்காளதேசத்தில் நேற்று 12வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தொடர்ந்து 5வது முறையாக பிரதமர் ஷேக் ஹசீனா வெற்றி பெறுவார் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலுக்கு முன்னர் நடுநிலையான அரசாங்கத்தை நிறுவி அதன்பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த கோரிக்கையினை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் நிராகரித்தது.
எனவே சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக கருதி கலீதா வீட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட தொடங்கினர். அதன் ஒருபகுதியாக சிட்டகாங், காசிபூர் நகரில் வாக்குச்சாவடி மையங்களாக அமைக்கப்பட்ட 5 பள்ளிக்கூடங்களுக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தனர். அங்குள்ள தீயணைப்பு சேவை புள்ளிவிவரங்கள்படி கடந்த 16 மணி நேரத்தில் 14-க்கும் மேற்பட்ட தீ வைப்பு சம்பவங்கள் அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தேர்தலில் இந்தியாவைச் சேர்ந்த மூவர் உட்பட 125 வெளிநாட்டு பார்வையாளர்கள் பொதுத்தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 350 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 299 தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. மீதமுள்ள ஒரு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் உயிரிழந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, தேர்தலுக்குப் பிந்தைய நாடாளுமன்ற கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் அவற்றுக்கான நியமனம் நடைபெறும்.
இந்த தேர்தலில் பிரதமரும் அவாமி லீக் தலைவருமான ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்றார். அவர் கோபால்கஞ்ச்-3 தொகுதியில் போட்டியிட்ட நிலையில் வெற்றி பெற்றார். ஹசீனா பெற்ற வாக்குகள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 965. அவரை எதிர்த்து போட்டியிட்ட வங்காளதேச சுப்ரீம் கட்சி வேட்பாளர் நிஷாம் உதின் லஷ்கர் வெறும் 469 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.
இந்த முடிவுகளை கோபால்கஞ்ச் துணை ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான காசிமஸ்புபுல் ஆலம் அறிவித்தார். ஷேக் ஹசீனா இந்த தொகுதியில் இருந்து 8-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின்படி பெரும்பாலான இடங்களில் ஆளும் அவாமி லீக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. முழுமையான முடிவுகள் இன்று வெளியாகும் என வங்காளதேச தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.