பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு!
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவு பெற்ற 101 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
அதேபோல் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (நவாஸ்), 75 இடங்களில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களையும் முட்டாஹிதா குவாமி இயக்கம்-பாக். 17 இடங்களையும் கைப்பற்றின. மேலும் 17 தொகுதிகளில் மற்ற சிறிய கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
இதையும் படியுங்கள் : திடீரென வெடித்த கண்ணிவெடி - விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி பிரதமர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும், அவருக்கு ஆதரவு தெரிவிப்போம் என்று பிலாவல் பூட்டோ அறிவித்த நிலையில், நவாஸ் ஷெரீஃப் தனது சகோதரரும் பாக். முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீஃபை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளார். இதனால் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவு பெற்று ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.