#KannadaCinemaவிலும் பாலியல் துன்புறுத்தல்கள் - விசாரணைக்குழு அமைக்க முதலமைச்சர் #Siddaramaiahவிடம் கோரிக்கை!
மலையாளம் சினிமாவைத் தொடர்ந்து கன்னட சினிமாவிலும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
கேரள திரையுலகில் நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா குழு தாக்கல் செய்த அறிக்கையைத் தொடா்ந்து, நடிகைகள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுகளை தொடா்ந்து முன்வைத்தனர். இது மலையாள திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என சமந்தா உள்ளிட்ட நடிகைகள் கோரிக்கை வைத்தனர்.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவை தொடர்ந்து கன்னட திரை உலகிலும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக நடிகைகள் சஞ்சனா, நீது ஆகியோர் பரபரப்பு புகார் கொடுத்தனர். இதுபற்றி கர்நாடக சினிமா வர்த்தக சபை கூட்டத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் தொல்லை பற்றிய புகார்கள் குறித்து பேசவிடாமல் தடுத்துவிட்டனர் என்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு கன்னட இயக்குநர் கவிதா லங்கேஷ் தலைமையிலான குழுவினர் சினிமா உலகில் பாலியல் தொல்லை பற்றி விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என கடிதம் அனுப்பினார். கன்னட திரை உலகிலும் பாலியல் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.