“பிரபல கிரிக்கெட் வீரர்களிடமிருந்து பாலியல் தொல்லை” - திருநங்கையான பின் ஏற்பட்ட கசப்பான அனுபவம் பகிர்ந்த அனயா!
இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கரின் மகள் அனயா பங்கர். திருநங்கையான இவர் ஆர்யன் என்று அறியப்பட்டபோது age-group கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த நிலையில் அவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக லல்லான்டாப்பிற்கு அவர் அளித்த பேட்டியில், “எனக்கு 8,9 வயது இருக்கும்போது என் அம்மாவின் அலமாரியில் இருந்து துணிகளை எடுத்து அணிவேன். பின்னர், கண்ணாடியைப் பார்த்து நான் ஒரு பெண் என உணர்ந்து அவ்வாறு இருக்க விரும்பினேன். முஷீர் கான், சர்பராஸ் கான், யஷஸ்வி செய்ஸ்வால் போன்ற சில பிரபலமான கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடியுள்ளேன்.
அப்பா நன்கு அறியப்பட்ட நபர் என்பதால் நான் என்னைப் பற்றி ரகசியமாக வைத்திருக்க வேண்டியிருந்தது. கிரிக்கெட் உலகம் பாதுகாப்பின்மை மற்றும் டாக்சிக்கான ஆண்களால் நிறைந்துள்ளது. பாலின மறு உறுதிப்படுத்தல் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆதரவு இருந்த அதே நேரத்தில் துன்புறுத்தலும் இருந்தது.
பிரபலமான சில கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஒரு நபர் அனைவர் முன்பும் என்னை தகாத வார்த்தையில் பேசிய பிறகு, அருகில் வந்து என்னுடைய புகைப்படங்களை கேட்பார். இது குறித்து ஒரு மூத்த வீரரிடம் தெரிவித்தபோது, அவர் என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தார்” இவ்வாறு அவர் கூறினார்.