பாலியல் வன்கொடுமை வழக்கு | பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொன்ன அலகாபாத் உயர்நீதிமன்றம் - அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்!
அலகாபாத் உயர்நீதிமன்றம் முன்னதாக ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் பெண்ணின் மார்பகங்களை தொடுவதும், பேண்ட் நாடாவை அவிழ்ப்பதும் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு ஈடாகாது என்று தீர்ப்பு வழங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து உச்சநீதிமன்றம் அந்த தீர்ப்பு வழங்கிய நீதிபதியை கண்டித்ததுடன் தீர்ப்பையும் நிறுத்தி வைத்தது
அதைத் தொடர்ந்து அண்மையில் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட எம்.ஏ. மாணவி மது அருந்திக்கொண்டு குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் மூலம் அந்த பெண் தனக்குத்தான் பிரச்னை ஏற்படுத்திக் கொண்டார். இதில் அவருக்கும் பொறுப்பு உண்டு என அலகாபாத் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் ராய் கருத்து தெரிவித்து குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கினார்.
இந்த நிலையில் அலகாபாத் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் ராயின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது. விசாரணையின்போது “ஜாமீன் வழங்கப்படலாம்.. ஆனால் அந்த பெண்ணே பிரச்னையை வரவழைத்துக் கொண்டார் என விவாதம் எதற்கு? நீதிபதிகள் இதுபோன்ற வழக்கில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்” என நீதிபதி பி.ஆர். கவாய் கண்டித்துள்ளார்.