பாலியல் குற்றச்சாட்டு - கட்சி பொறுப்பிலிருந்து தெய்வச்செயல் நீக்கம்!
ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைத் சேர்ந்தவர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல். திருமணமான இவர் தன்னை காதலிப்பதாக கூறி, வலுக்கட்டாயமாக கடத்தி சென்று திருமணம் செய்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கல்லூரி மாணவி ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார். தொடர்ந்து மேலும் ஒரு பெண், தெய்வசெயல் மீது பாலியல் கூறியிருந்தார்.
தொடர்ந்து இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டன போராட்டம் அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் தெய்வசெயல் மீது காவல்துறையில் புகாரளிக்க வந்தபோது முதல் தகவல் அறிக்கையில் முழுமையான விவரங்களை காவல்துறையினர் சேர்க்க மறுத்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திமுக கட்சிப் பொறுப்பில் இருந்து தெய்வசெயல் நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞர் அணித் துணை அமைப்பாளர் தெய்வா (எ) தெய்வச்செயல்அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக, ம.கவியரசு என்பவர், அந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவரும் இவருடன் இணைந்து கழகப் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.