செந்தில் பாலாஜி ஜாமின் மனு - அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள்...பதிலளிக்க முடியாமல் திணறிய அமலாக்கத்துறை!
“தற்போதெல்லாம் நாங்கள் வழக்கறிஞர்களிடம் கேள்வி கேட்டால், அதை தனிப்பட்ட முறையில் விரோதமாக எடுத்துக் கொள்கிறார்கள்” என செந்தில்பாலாஜி மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். முதன்மை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்காத நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தொடர்ந்துள்ளார். இந்த மனுமீதான விசாரணை கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை சொலிசிட்டர் ஜெனரல் இல்லாததால், வழக்கை வேறு ஒரு தினத்திற்கு மாற்றி வைக்குமாறு அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்று ஜாமீன் மனுவை இன்று ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த ஜாமீன் மனுமீதான விசாரணை நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது “பிணை கேட்பதற்கு என்று சில முக்கிய வழிமுறைகள் இருக்கிறது என அமலாக்கத்துறை சார்பில் வாதம் செய்யப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்றவற்றில் தனது பங்கு எதுவும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு கூறுகிறது. அது குறித்து உங்களின் பதில் என்ன ? இதுவரை அது குறித்து பதில் எதுவும் இல்லையே என கேள்வி எழுப்பினர். அதற்கு “பென்டிரைவில் உள்ள தரவுகளுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என செந்தில் பாலாஜி கூறுவதை ஏற்க முடியாது”என அமலாக்கத்துறை தெரிவித்தது.
செந்தில் பாலாஜி விவகாரத்தில் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற ஆதாரங்கள் பற்றி நாங்கள் கடந்த 15 நிமிடங்களாக தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். ஆனால் நீங்கள் அதற்கு பதில் அளிக்காமல் உள்ளீர்கள். கைப்பற்றப்பட்ட பென்டிரைவ் போன்ற ஆவணங்கள் தொடர்பான தடையவியல் பரிசோதனை ஆவணங்கள் எங்கே? நீங்களும் நானும் நிபுணர்கள் இல்லை. தடயவியல் நிபுணர்கள் தான் அதற்கு பதில் கூற வேண்டும். அந்த பதிலைத்தான் நாங்கள் எங்கே எனக் கேட்கிறோம்.
இன்று பதில் வழங்க இயலவில்லை என்றால், நாளை தள்ளி வைக்கிறோம். பதில் கூறுங்கள்” என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் தயார் செய்யப்பட்ட குறிப்பை நீதிபதிகளுக்கும், செந்தில் பாலாஜி தரப்புக்கும் வழங்கினர். அதற்கு, “அமலாக்கத்துறை குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறது” என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சித்தார் லூத்ரா குற்றச்சாட்டினார். இதனையடுத்து விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.