செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி... மீண்டும் அமைச்சரானால் உச்ச நீதிமன்றத்தை அணுகவும் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யாகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அபய்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை தற்போது ராஜிநாமா செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பு :-
இந்த வழக்கு விவகாரம் முடியும் வரை செந்தில் பாலாஜி எந்த ஒரு பதவியும் வகிக்கக் கூடாது என உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
செந்தில் பாலாஜி:-
அவ்வாறு உச்ச நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது.
மனுதாரர் தரப்பு:-
அதிகாரம் இல்லாமல் இவரைப் போன்றவர்கள் நிறைய நாட்கள் இருக்க முடியாது. எனவே தான் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறுகிறோம். மேலும் இவருடைய முந்தைய நடத்தைகளை நாம் கவனத்தில் கொண்டால், அவர் மீண்டும் உத்தரவை மீறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதே. எனவேதான் இதை ஒரு உத்தரவாக பிறப்பிக்க வேண்டும். அவர் எந்த ஒரு பதவியையோ வேறு எந்த அதிகாரமிக்க பதவியில் அமரக்கூடாது.
ஏனெனில் செந்தில் பாலாஜியைபொறுத்தவரைக்கும் அவர் சிறையில் இருந்து வந்தவுடன் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். முன்னதாக வழக்கு விசாரணையின் போது கூட எக்காலத்திலும் அவரை கைது செய்தது கிடையாது. அதிகாரமிக்க நபராக இருந்த காரணத்தினால். அவர் எந்த public office பதவி வகிக்க கூடாது.
அமலாக்கத்துறை தரப்பு;-
செந்தில் பாலாஜி எவ்வளவு அதிகாரம் மிக்க நபர் என்றால், அவர் சிறையில் இருக்கும் போது கூட இலாக்கா இல்லாத அமைச்சராக அவர் தனது பதவியை தொடர்ந்தார். எனவே உச்ச நீதிமன்றம் அவர் எந்த பதவியையும் வகிக்கக் கூடாது என ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இதுதான் இந்த வழக்கிற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். ஏனெனில் அவர் ஏதாவது பதவியில் இருந்தால் நிச்சயமாக சாட்சியங்கள் மற்றும் சாட்சிகளை அச்சுறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.
நீதிபதிகள்:-
அவ்வாறு அவர் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றால், நீங்கள் அவருடைய ஜாமினை ரத்து செய்யக் கோரி உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.
அமலாக்கத்துறை:-
வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் அமைச்சர் ஆக கூடாது. வேறு அரசு பதவிகள் வழங்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.
செந்தில் பாலாஜி தரப்பு:-
வழக்கு முடிய 15 ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை எந்த பதவியும் வகிக்க முடியாது என்று உத்தரவிட முடியாது.
நீதிபதிகள் உத்தரவு:-
செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்ற வாதத்தை ஏற்கிறோம். அந்த வகையில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க தேவையில்லை. எனவே ஜாமினை ரத்து செய்ய கோரிய மனுவை முடித்து வைக்கிறோம். ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான பிரதான வழக்கில் அவர் ஜாமின் கோரியபோது தான் எந்த அதிகாரத்திலும் இல்லை. எந்த பதவியிலும் இல்லை என்று கூறினார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு உச்ச நீதிமன்றதால் ஜாமின் வழங்கப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.