முதன்முறையாக 80,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்!
இந்திய பங்குச்சந்தை குறியீட்டு எண் 80,000 புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தை கடந்த மாத தொடக்கத்தில் கடும் சரிவை சந்தித்தது. குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ம் தேதி இந்திய பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியடைந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஜூன் 5ம் தேதி முதல் இந்திய பங்குச்சந்தை சரிவில் இருந்து மீளத்தொடங்கியது. தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது. அதன்படி, பங்குச்சந்தை குறியீட்டு எண் 80,000 புள்ளிகளை கடந்துள்ளது. 2006 பிப்ரவரியில் 10,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் குறியீட்டு எண், 18 ஆண்டுகளில் (2024 ஜூலை) 80,000 புள்ளிகளை கடந்து பங்கு வர்த்தகத்தில் வரலாற்று உச்சம் தொட்டுள்ளது.
பங்குச் சந்தை நிபுணர்கள் இது குறித்து கூறும்போது, "வங்கி, சேவை மற்றும் உற்பத்தி துறை பங்குகளின் ஏற்றம், பிரதமர் மோடி அரசின் மாற்றமில்லா கொள்கைகள், 100 நாளில் முக்கிய திட்டங்களை செயல்படுத்துதல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து ரிசர்வ் வங்கியின் நம்பிக்கையான கணிப்புகள், கடனுக்கான வட்டி விகிதத்தில் சீர்திருத்தம் குறித்த அறிவிப்பு, உலகளவில் அரசியல் பொருளாதார நிலையில் மாறி வரும் முன்னேற்றங்கள், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் பொருளாதார கணிப்புகள், விரைவில் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தல் போன்ற காரணிகளால் இந்திய பங்குச் சந்தை அதிகபட்ச உச்சத்தை அடைந்தது" என்று கூறுகின்றனர்.