நூற்றாண்டு கண்ட "தகைசால் தமிழர்" என்.சங்கரய்யா காலமானார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 102.
சளி, காய்ச்சல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த என்.சங்கரய்யா சிகிச்சை பலனின்றி காலமானதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராகவும், சுதந்திரத்துக்குப் பின்பு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடியவர் என்.சங்கரய்யா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கிய 32 பேரில் ஒருவராக இருந்தவர்.
90 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் மிகப் பெரிய போராளியாக விளங்கிய சங்கரய்யா, 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதை முதன்முறையாக பெற்று, அந்த விருதுக்கு பெருமை சேர்த்தவர்.
என்.சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சிண்டிகேட் செனட் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், ஆளுநர் அனுமதி அளிக்காததால் அதனை கொடுக்க முடியாமல் போனது. சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க கையெழுத்து போட மறுத்த ஆளுநரின் செயலைக் கண்டித்து பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் புறக்கணித்தனர்.
இந்த நிலையில் சங்கரய்யாவின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கரய்யாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சங்கரய்யாவின் உடல், இன்று 12 மணிக்கு குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, பிற்பகல் 3 மணிக்கு சென்னை தியாகராயர் நகர் வைத்தியராம் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அக் கட்சியின் தோழர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் நாளை இறுதி நிகழ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.