விமான டிக்கெட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை - லட்சக்கணக்கில் மோசடி செய்த டிராவல் ஏஜென்சி உரிமையாளர் கைது!
கடந்த 3 ஆண்டுகளாக விமான டிக்கெட்டுகளை போலியாக அச்சடித்து விற்பனை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் தனது மகன் படிப்பிற்காக அமெரிக்கா
செல்வதற்கு விமான டிக்கெட் எடுக்க திட்டமிட்டு இருந்தார். ஏற்கனவே நுங்கம்பாக்கத்தில் வணிக வளாகத்தில் செயல்பட்ட ஆல் இந்தியா டிராவல் ஏஜென்சி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ஜெகநாதன் மூலமாக டிக்கெட் பதிவு செய்து அமெரிக்கா சென்று வந்துள்ளார்.
தற்போது தனது மகன் வெளிநாட்டில் படிக்க செல்வதற்கு டிக்கெட் பதிவு செய்வதற்கு ஜெகன்நாதனை ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு உள்ளார். தனது மகன் செல்வதற்கு விமான டிக்கெட் பதிவு செய்து தருமாறு கேட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : விண்வெளியில் காணப்படும் தனித்துவமான கிறிஸ்துமஸ் மரம்; ஆச்சரியப்படுத்தும் புகைப்படத்தை பகிர்ந்த நாசா!...
இதனையடுத்து ஜெகநாதன் ஆன்லைன் மூலமாக ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 875 ரூபாய்
செலுத்துமாறு கூறி விமான டிக்கெட்டை பதிவு செய்து அனுப்பியுள்ளார். அனுப்பப்பட்ட ஆவணம் விமான டிக்கெட் இல்லை என்பதை அறிந்து கிருஷ்ணவேணி ஜெகன்நாதனை தொடர்பு கொண்ட போது தொடர்ந்து செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து, சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி புகார் அளித்தார். போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஜெகன்நாதன் மோசடிக்காக பயன்படுத்திய ஜிபே கணக்கு பயன்படுத்தி, மடிப்பாக்கத்தில் இருந்ததை அறிந்த போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
65 வயது முதியவரான ஜெகநாதன் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆல் இந்தியா டிராவல் ஏஜென்சி என்பதை நுங்கம்பாக்கத்தில் வணிக வளாகத்தில் நடத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு நிறுவனம் நஷ்டமானதை அடுத்து நடத்த முடியாமல் மூடி உள்ளார்.
இருப்பினும், வீட்டில் இருந்தபடியே தனது பழைய வாடிக்கையாளர்களுக்கும் ஆன்லைன் மூலமாக தொடர்பு கொண்டு டிக்கெட் பதிவு செய்து கொடுத்துள்ளார். 3 செல்போன்கள் மற்றும் 2 லேப்டாப்புகள் வைத்துக் கொண்டு பல போலியான விமான டிக்கெட் விற்பனை செய்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். அதில் எந்த
பணமும் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மோசடிக்கு பயன்படுத்திய
லேப்டாப்புகள், செல்போன்கள் மற்றும் ஏடிஎம் கார்டுகளை போலீசார் பறிமுதல்
செய்துள்ளனர். மேலும் ஜெகநாதனின் மகன் மும்பையில் பணிபுரிந்து வருவதால்
அவருடைய வங்கி கணக்கையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.