செல்பி மோகம் - மலை உச்சியிலிருந்து தவறி விழுந்த புதுப்பெண் உயிரிழப்பு...
நவி மும்பையில் சுற்றுலாவுக்கு சென்ற போது மலை உச்சியில் இருந்து செல்பி எடுத்த புதுப்பெண், தவறி விழுந்து உயிரிழந்தார்.
மராட்டிய மாநிலம் புனே தத்தாவாடி பகுதியை சேர்ந்தவர் சுபாங்கி (24). கடந்த மாதம் 8ம் தேதி பாட்டீஸ் (28) என்ற சாப்ட்வேர் இன்ஜினியருக்கும் சுபாங்கிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து டிச.28 புதன்கிழமையன்று புதுமண தம்பதி தேனிலவுக்காக லோனாவாலா சென்றனர். மறுநாள் வியாழக்கிழமை பன்வெல், மாதேரான் இடையே உள்ள பிரபல்காட் கோட்டைக்கு சென்றுள்ளனர்.
அப்போது மலை உச்சியின் ஓரத்தில் நின்று கொண்டு சுபாங்கி செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சுபாங்கி தவறி விழுந்தார். இதைக்கண்ட பாட்டீஸ் உடனே அருகிலிருந்த தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் மீட்பு குழுவினர் மற்றும் மலையேறும் நபர்களோடு விரைந்து வந்து 200 அடி பள்ளத்தில் விழுந்த சுபாங்கியை மீட்டனர். பின் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுபாங்கியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.