ஆழ்கடலில் வாக்களித்த ஸ்கூபா டைவர்ஸ் - விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய முயற்சி!
வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் வாக்களிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையை சேர்ந்த ஸ்கூபா டைவிங் குழு எடுத்த புதிய முயற்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மக்களவை தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து, வேட்பாளர்களை அறிவித்து, பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு தேர்தலின்போதும் 100% வாக்குப்பதிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழும். ஆனால் பல்வேறு காரணங்களால் 100% வாக்குப்பதிவு சாத்தியமாவது இல்லை. வாக்காளர்கள் அனைவரும் வாக்களித்து 100% வாக்குப்பதிவு என்ற இலக்கை அடைய வேண்டும் என்றும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை விளக்கும் நோக்கிலும், ஒவ்வொரு தேர்தலின்போதும் பல்வேறு நடவடிக்கைகள் மூலம், தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வ அமைப்புகளும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த 6 ஸ்கூபா டைவர்கள் அடங்கிய குழு, நீலாங்கரை கடற்பகுதியில், ஆழ்கடலுக்குச் சென்று எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற செய்முறை விளக்கத்தை அரங்கேற்றினர். கடலில் சுமார் 60 அடி ஆழத்திற்கு சென்ற அந்த குழு, மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி, வாக்களிக்கும் செயல்முறையை விளக்கிக் காட்டினர். டெம்பிள் அட்வென்சர் இயக்குநரும், ஸ்கூபா ட்வைவிங் பயிற்சியாளருமான அரவிந்த் தருண்ஸ்ரீ இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.
இதையும் படியுங்கள் : “பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்டவுன் ஆரம்பம் ஆகிவிட்டது...” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய முயற்சியை கையாண்டுள்ள ஸ்கூபா டைவிங் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் இது தொடர்பான வீடியோவை இந்திய தேர்தல் ஆணையம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.