சுட்டெரிக்கும் வெயில்... இன்றுமுதல் கதர் ஆடையில் குழந்தை ராமர்!
கோடைக்காலம் தொடங்க உள்ளநிலையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவுள்ளதால் அயோத்தி ராமர் கோயில் ஸ்ரீபால ராமர் சிலைக்கு இன்று முதல் கதர் ஆடை அணிவிக்கப்படுகின்றன.
அயோத்தியில் 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கடந்த ஜன. 22 ஆம் தேதி கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 300 ஆண்டுகள் பழமையான கல்லில் 4.25 உயரமுடைய குழந்தைப் பருவம், குறும்புத்தனம், கம்பீரம் என அனைத்து பாவனைகளையும் உள்ளடக்கிய 5 வயது குழந்தை ராமர் சிலை வடிவமைக்கப்பட்டது.
கோடைக்காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு குழந்தை ராமருக்கு இன்று முதல் கதர் ஆடை அணிவிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கோயில் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;
“கோடை காலத்தின் வருகை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இன்று முதல் பகவான் ஸ்ரீ ராம்லாலா பருத்தி ஆடை அணிந்துள்ளார். , கோட்டா மலர்களின் வாசனையோடு, இயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட, கைகளால் நெய்யப்பட்ட ஆடையால் பிரபு அலங்கரிக்கப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டுள்ளனர்.