“அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது!” - முதலமைச்சர் MKStalin!
அந்நிய முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அரசு கோப்புகள் தொடர்பான பணிகள் இ-ஆபிஸ் வழியாக நடைபெறுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
அதற்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து உலக நாடுகளின் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதை தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு மேலும் சில தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கிறார்.
முதலாவதாக அமெரிக்காவின் சான் பிரான்ஸிக்கோ சென்ற முதலமைச்சர், அமெரிக்கா வாழ் தமிழர்கள் சிற்பான வரவேற்பளித்திருந்தனர். சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு முதலீட்டாளர்கள், முதலமைச்சரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது முதலீடுகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும் சிகாகோவில் மட்டும் அஸ்யூரண்ட், ஈட்டன், ட்ரில்லியன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் சுமார் 3050 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்தாலும், தான் கையெழுத்திட வேண்டிய அரசு கோப்புகள், திட்டங்கள் போன்றவற்றின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் (X) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.