காலாண்டு விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு!
தமிழ்நாட்டில் 2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கான காலாண்டுத் தேர்வு, கடந்த மாதம் செப்.10-ம் தேதி தொடங்கி செப்.26-ம் தேதி வரை முதலாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் நடைபெற்றது. அதற்கு அடுத்த நாளான செப்.27-ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வு விடுமுறையானது தொடங்கியது. இந்த விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
காலாண்டு தேர்வு விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் (அக்.6) பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்காக தூய்மை பணியாளர்கள் உதவியுடன் பள்ளிகள் சுத்தப்படுத்தப்பட்டன. இதற்கிடையே, பருவமழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழிகாடுதல்கள் அனுப்பப்பட்டன.
அதில், பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகள், மூடப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும், பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும், பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் பழுதுபட்ட மின்சாதனப் பொருட்களை அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டிருந்தது.