#SchoolLeave | தொடர் கனமழை... திருவண்ணாமலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சரியாக நேற்று (நவ.29) பிற்பகல் 2.30 மணியளவில் புயலாக வலுபெற்றது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் எதிரொலியாக சென்னையில் விடிய விடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (நவ.30) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழைக்கு வாய்ப்புள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் தாலுக்கா மற்றும் திருவிடைமருதூர் தாலுகாவில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.30) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.