#SchoolLeave | தொடர் கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
கனமழை காரணமாக பல மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. ஃபெஞ்சல் புயல் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது.
புதுச்சேரி அருகே நிலவி வந்த ஃபெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. புயல் கரையை கடந்த நிலையிலும் விழுப்புரம் புதுச்சேரி பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரி களுக்கு இன்று (டிச.2) விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி-கல்லூரி களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், கோத்தகிரி ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.