30 ஆண்டுகளுக்கு முன் ரூ.500க்கு தாத்தா வாங்கிய எஸ்பிஐ பங்குகள்... லட்சங்களில் லாபம் பெற்ற பேரன்...
சண்டிகரில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனது தாத்தா வாங்கிய எஸ்பிஐ பங்கு சான்றிதழை கண்டுபிடித்துள்ளார். அப்போது வெறும் ரூ.500 கொடுத்து வாங்கிய அந்த பங்குகளின் மதிப்பு இப்போது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
சண்டிகரில் வசிக்கும் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தன்மய் மோதிவாலா வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மிகப்பழைய பங்கு சான்றிதழ் ஒன்றை கண்டெடுத்தார். மருத்துவரின் தாத்தா 1994-ம் ஆண்டு ரூ.500 மதிப்புள்ள எஸ்பிஐ பங்குகளை வாங்கியுள்ளார். அதை அவர் விற்கவில்லை. மேலும் தன்னிடம் எஸ்பிஐ பங்குகள் இருப்பதையே மருத்துவரின் தாத்தா மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
1994-ம் ஆண்டு ரூ.500 முதலீடு செய்த நிலையில், இப்போது அந்த தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. பங்குச்சந்தையில் நீண்ட கால முதலீடு செய்வதில் இருக்கும் பலன் குறித்து இந்த நிகழ்வு காட்டுகிறது என நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். 30 ஆண்டுகளில் அவரது எஸ்பிஐ பங்குகள் மதிப்பு 750 மடங்கு அதிகரித்துள்ளது. அப்போது அவரது தாத்தா வெறும் ரூ.500 மட்டும் முதலீடு செய்த நிலையில், இப்போது அது ரூ.3.75 லட்சம் மதிப்புள்ளதாக அந்த மருத்துவர் தெரிவித்தார்.
பங்குகள் அனைத்தும் நிச்சயம் டிமேட் கணக்குகளில் தான் இருக்க வேண்டும் என்ற விதி தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் இந்த பங்கு சான்றிதழை உரிய ஆலோசகர் உதவியுடன் டிமேட் பங்குகளாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. கையெழுத்து, முகவரி என பல சிக்கல் இருந்ததால் இதை டிமேட் பங்குகளாக மாற்ற பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பிறகும் அந்த பங்குகளை அவர் வைத்துக் கொள்ளவே முடிவு செய்துள்ளாராம். தற்போது பண தேவை இல்லை என்பதால் அதை விற்க போவதில்லை என அவர் அறிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நிலையில், அவரது ஸ்டோரி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
பங்குசந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் போது அதன் பங்குகள் நமது டிமேட் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த டிமேட் கணக்குகள் எல்லாம் இல்லாத போது, ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் உங்களுக்கு இந்த பங்கு பத்திரத்தை தான் கையில் கொடுப்பார்கள். அப்படி தன்மய் மோதிவாலாவின் தாத்தா எஸ்பிஐ நிறுவனத்தில் இருந்து வாங்கிய பங்கு சான்றிதழ் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.