உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியுள்ளது.
தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உச்சநீதிமன்றம் எஸ்.பி.ஐ வங்கிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் பத்திர விவரங்களை வழங்க கூடுதல் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி மனு தாக்கல் செய்தது. கூடுதல் கால அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ. வங்கி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜெ.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது.
அப்போது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை கவனமாக ஒப்பிட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு காலஅவகாசம் வேண்டும் என எஸ்பிஐ வங்கி சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது. "தேர்தல் பத்திர விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்து 26 நாட்கள் ஆகிறது. இந்த 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? எஸ்.பி.ஐ. வங்கியால் செய்ய முடியாத வேலை எதையும் நாங்கள் கொடுக்கவில்லை. ஏற்கனவே நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம். அப்படியெனில் அந்த வேலையை செய்து முடிக்க தற்போது கால அவகாசம் கேட்பது ஏன்?" என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.
“உச்சநீதிமன்ற உத்தரவின் சில பகுதிகளை திருத்தம் செய்தால், மூன்று வாரங்களுக்குள் விவரங்களை தாக்கல் செய்ய இயலும்" என்று எஸ்.பி.ஐ. வங்கி தரப்பு தெரிவித்தது. இதனையடுத்து இன்றுக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.பி.ஐ.வழங்க வேண்டும். அந்த விவரங்களை 15-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த தவறினால், எஸ்.பி.ஐ. அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவின் படி தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் இந்த விவரங்களை இணையத்தில் வெளியிட வாய்ப்பிருக்கிறது.